தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

36 நாடுகளுக்குப் பயணத் தடை விதிக்க டிரம்ப் அரசாங்கம் ஆலோசனை

2 mins read
5c4ed19d-e540-42ba-a71a-6c4fa914a930
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கூடுதல் நாடுகளுக்குப் பயணத் தடையை விரிவுபடுத்த ஆலோசித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் துறையினரிடையே பகிரப்பட்ட ஆவணம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கண்டது.

முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதைத் தடை செய்யும் உத்தரவில் திரு டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திரு டிரம்ப் கூறியிருந்தார்.

இப்போது தடை செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 36க்கு உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

விசா முடிந்த பிறகும் தொடர்ந்து அமெரிக்காவில் இருப்பது, அமெரிக்காவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் சொந்த நாடுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசிப்பதாக டிரம்ப் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 60 நாள்களுக்குள் அதுபோன்ற விவகாரங்களின் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் புர்க்கினோ ஃபாசோ, கம்போடியா, கெமரூன், எத்தியோப்பியா, நைஜீரியா, செனகல், லைபீரியா, கானா உள்ளிட்ட நாடுகள் மீது பயணத் தடை விதிக்கப்படக்கூடும். இவற்றின் மீது முழுப் பயணத் தடை அல்லது பயணக் கட்டுப்பாடுகள விதிக்கப்படலாம்.

முன்னதாக ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ குடியரசு, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. புருரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுவேலா அகிய நாடுகளைச் சேர்ந்தோருக்குப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

திரு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த முதல் தவணைக் காலத்தில் ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீது பயணத் தடை விதித்தார். அந்தச் சட்டத்தை, பல்வேறு நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் செயல்படுத்த அனுமதித்தது.

குறிப்புச் சொற்கள்