தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தகுதியை ஹார்வர்ட் இழக்கக்கூடும்: டிரம்ப் நிர்வாகம்

2 mins read
34e3029f-2382-452d-9104-22456f636f98
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களைத் தங்களது வளாகங்களில் அனுமதிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி நிறுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்து இருந்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: மாணவர்களைப் பற்றிய விவரங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு முரணாக இருப்பின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.

இது கல்வி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் ஆக அண்மைய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் US$2.7 மில்லியன் (S$3.5 மில்லியன்) மதிப்புள்ள இரண்டு மானியங்களை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்வதாக அதன் செயலாளர் திருவாட்டி கிறிஸ்டி நோயெம் புதன்கிழமை (ஏப்ரல் 16) அறிவித்தார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் வன்செயல்மிக்கவை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், அந்த மாணவர்களைப் பற்றிய ஆவணங்களை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஹார்வர்டுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கேட்டுக்கொண்டபடி, ஆவணங்களைச் சரிபார்த்து சமர்ப்பிக்க இயலாத நிலையில் அந்தப் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் தகுதியை இழக்க நேரிடும் என்று அறிக்கை ஒன்றில் திருவாட்டி நோயெம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வெளிநாட்டு மாணவர் விசா தொடர்பான பரிசீலனை, மானியங்கள் ரத்து ஆகியன தொடர்பாக திருவாட்டி நோயெம் எழுதிய கடிதம் குறித்து பல்கலைக்கழகம் அறிந்திருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இயங்கும் பல்கலைக்கழகங்கள் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை தங்களது வளாகங்களில் அனுமதித்தால் நிதி உதவி நிறுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாள்களுக்குள் அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் புதிய விதிமுறை ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சட்டவிராதக் குடியேறிகள் அரசாங்கத்தில் பதிவு செய்ததற்கான ஆவணங்களைத் தங்களுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் இந்தப் புதிய விதி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்