வாஷிங்டன்: ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதல்களையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (ஏப்ரல் 8) காலை 6.32 மணிக்கு தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள திரு டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இருவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதல்களையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது இருதரப்பு போர்நிறுத்தமாக அமையும்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “ஈரானிடமிருந்து 10 அம்சத் திட்டவரைவு எங்களுக்குக் கிடைத்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது ஒரு சாத்தியமான அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“கடந்த காலத்தில் நிலவி வந்த பல்வேறு சச்சரவுகளில் பெரும்பாலானவற்றுக்கு அமெரிக்காவும் ஈரானும் உடன்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இரண்டு வார கால அவகாசம் ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும் வழிவகுக்கும்,” எனத் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பேச்சுவார்த்தை தொடரும் வேளையில் இஸ்ரேலும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

