ஜார்ஜியா தேர்தல் தொடர்பான விசாரணை: குற்றஞ்சாட்டப்பட்டார் டிரம்ப்

ஜார்ஜியா தேர்தல் தொடர்பான விசாரணை: குற்றஞ்சாட்டப்பட்டார் டிரம்ப்

2 mins read
60082308-0e88-4b2f-a4f4-5fa22328ca4e
இவ்வாண்டு நான்காவது முறையாக திரு டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜார்ஜியா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் 2020ஆம் ஆண்டு ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

திரு டிரம்ப்புடன் மேலும் 18 பேர் மீதும் குற்றஞ்சாட்டுவதற்கு நீதிபதிக் குழு ஒன்று வாக்கெடுப்பு நடத்தியது.

மொத்தம் 41 குற்றச்சாட்டுகளில், திரு டிரம்ப்புக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. இவ்வாண்டு நான்காவது முறையாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திரு டிரம்ப் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

தேர்தலில் தலையிடுவதாகக் குறைக்கூறல்கள் எழுந்ததன் தொடர்பில் திரு டிரம்ப்புக்கும் அவரது பங்காளிகளுக்கும் எதிராக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபுல்டன் மாவட்ட வழக்கறிஞர் ஃபானி விலிஸ் விசாரணையைத் தொடங்கினார்.

திரு டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் ரூடி ஜியூலியானி, வெள்ளை மாளிகையின் முன்னாள் வழக்கறிஞர் ஜான் ஈஸ்ட்மென் ஆகியோர் திரு டிரம்ப்புடன் கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுவோரில் அடங்குவர்.

பிரதிவாதிகள் அறிந்தே வேண்டுமென்று சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு திரு டிரம்ப்புக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவுகளை மாற்றத் திட்டமிட்டதாகக் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சாட்சியங்களின் எண்ணங்களை மாற்றியது, கணினி அத்துமீறல், திருட்டு, பொய்ச் சான்று உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், திருவாட்டி விலிஸின் விசாரணை அரசியல் நோக்கத்தில் தூண்டப்பட்ட ஒன்று எனத் திரு டிரம்ப் கூறிவருகிறார்.

2024ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தலையிடுவதற்காகவும், டிரம்ப் இயக்கத்தைத் துடைத்தொழிப்பதற்காகவும் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதாகத் திரு டிரம்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்