ரீடிங், பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்த வேளையில், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் துணை அதிபர் கமலா ஹாரிசும் பென்சில்வேனியா மாநிலத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 4) இறுதிக்கட்ட பிரசாரம் நடத்தினர்.
வாக்காளர்களின் ஆதரவைப் பெற US$2.6 பில்லியனுக்குமேல் (S$3.4 பி.) செலவிடப்பட்டுள்ளதாக பகுப்பாய்வு நிறுவனமான AdImpact மதிப்பிட்டுள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கும், 78, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹாரிசுக்கும், 60, இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) தேர்தலுக்குப் பிறகு சில நாள்கள் கழித்தும் வெற்றியாளர் யார் என்பது தெரியாமல் போகலாம். எனினும், 2020ல் செய்ததைப்போல எந்தவித தோல்வியையும் எதிர்த்துப் போராடப் போவதாக டிரம்ப், 78, மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்னும் வாக்களிக்காதோர் தேர்தல் தினத்தில் வாக்களிக்குமாறு இரு வேட்பாளர்களும் பென்சில்வேனியாவில் வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஏழு முக்கிய மாநிலங்களில் பென்சில்வேனியாவிலேயே ஆக அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலில் தாங்களே வெற்றி பெறப் போவதாக இரு வேட்பாளர்களும் கங்கணம் கட்டி வருகின்றனர்.