தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு எதிராக கடும் வரிவிதிப்பை அறிவித்தார் டிரம்ப்

2 mins read
மெக்சிகோ, கனடாவுக்கு எதிராக 25%, சீனாவுக்கு எதிராக 10% வரி விதிப்பு
a57be2c6-f8bf-425e-8361-abc74cb9358a
ஃபெட்டனில் என்ற போதைப் பொருள், சட்டவிரோதக் குடிநுழைவு போன்ற அவசரநிலைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள தான் வரி விதிப்பை அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு வரி விதித்துள்ளார்.

இதில் மெக்சிகோ, கனடா ஆகிய இரு நாடுகளிலிருந்து வரும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியும் சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக அவர் சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) அறிவித்தார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கனடாவிலிருந்து வரும் எரிசக்திப் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், மெக்சிகோவில் இருந்து வரும் எரிசக்திப் பொருள்களுக்கு முழு அளவில், அதாவது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அவர் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் அனைத்துலக அவசரநிலை பொருளியல் சட்ட விதிகளை ( International Emergency Economic Powers Act ) சுட்டி தாம் இந்த வரி விதிப்பு முடிவை எடுத்துள்ளாதாக திரு டிரம்ப் கூறினார். அந்தச் சட்ட விதிகள் நெருக்கடி சூழலை எதிர்கொள்ள அதிபருக்கு பரவலான அதிகாரத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி விதிப்பிலிருந்து எவ்வித விலக்கும் கிடையாது என்றும் அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

முன்னதாக, அதிபர் தேர்தலில் வென்றவுடன் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக தான் வரி விதிக்கப்போவதாக திரு டிரம்ப் ஒரு முறைக்கு பல முறை கூறி வந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. அதை அவர் தற்பொழுது செயல்படுத்தியுள்ளார். இது அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பதில் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பரந்த அளவிலான வர்த்தகப் போருக்கு வழிவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் பல நாடுகளுக்கு பொருளியல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

திரு டிரம்ப் சீனாவிலிருந்து மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் வரும் ஃபெட்டனில் போதைப் பொருளும் அதில் அடங்கியிருக்கும் மற்ற ரசாயனப் பொருள்களும் வருவதைத் தடுக்க பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அத்துடன், சட்டவிரோதக் குடிநுழைவும் தடுக்கப்பட வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்