தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லா இறக்குமதிப் பொருள்களுக்கும் 10% வரி: அதிபர் டிரம்ப்பின் புதிய அறிவிப்பு

2 mins read
d51e0174-e94e-477e-8996-41893e3dae19
புதிய வரிகளை புதன்கிழமை (ஏப்ரல் 2) அறிவித்த அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையில் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

புதன்கிழமை (ஏப்ரல் 2) அவர் வெளியிட்ட அறிவிப்பில் சீனா, வியட்னாம் போன்ற நாடுகளுக்கு அதிகமான வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்காவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளும் இந்த வரிவிதிப்பில் இருந்து தப்பவில்லை.

புதிய 10% வரிவிதிப்பு ஏப்ரல் 5 முதல் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பு உலக வர்த்தகப் போரை மேலும் கடினமாக்கும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

மேலும், வரிவிதிப்புக்குப் பதிலடியாக பிற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராகப் புதிய வரிகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நிகழ்ந்தால் மிதிவண்டி முதல் ஒயின் வரை ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

அதிகமாக வரிவிதிக்கப்பட்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.

ஏற்கெனவே சீனாவுக்கு எதிராக 20 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 34 விழுக்காடு வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆக, சீனா மீது 54 விழுக்காடு புதிய வரிகளை திரு டிரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 விழுக்காடு வரியும் ஜப்பானுக்கு 24 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டு உள்ளன.

10 விழுக்காடு வரிவிதிப்பு ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் நிலையில், இதற்கும் கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கும் வரிவிதிப்பு ஏப்ரல் 9 முதல் நடப்புக்கு வரும் என்றும் ஏறத்தாழ 60 நாடுகள் அதிக வரிவிதிப்பு வளையத்துக்குள் வரும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் விதிக்கும் வரிக்குப் பதிலடி தரும் வகையில் அந்த நாடுகளுக்கு எதிராகப் புதிய வரிகள் விதிக்கப்படுவதாக திரு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிப்பதற்கு இந்த வரிகள் உதவும் என்றும் அவர் தமது அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

புதிய 10% வரிவிதிப்பு பற்றிய அறிவிப்பு வெளியானதும் அமெரிக்கப் பங்குகள் சரிந்தன.

அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வரும் வரிகளால் உலகப் பொருளியல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதன் மீது முதலீட்டாளர்கள் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதால் பல வாரங்களாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

குறிப்பாக, பிப்ரவரி முதல், முதலீட்டாளர்களின் US$5 டிரில்லியனை (S$6.72 டிரில்லியன்) அமெரிக்கப் பங்குச் சந்தை விழுங்கிவிட்டது.

குறிப்புச் சொற்கள்