வெனிசுவேலா புதிய தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதாக டிரம்ப் அறிவிப்பு

2 mins read
c2b8fee3-ce1b-452f-bfd6-7faecd82bf4a
வெனிசுவேலா புதிய தலைவர்களைச் சந்திக்க திறந்த மனதுடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கரகாஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புதிய மாற்றமாக வெனிசுவேலாவின் இடைக்கால அதிபரான டெல்ஸி ரோட்ரிகெசுடன் தனது நிர்வாகம் சேர்ந்து செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கலாஸ் மதுரோ அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு திரு டிரம்ப்பிடமிருந்து உற்சாகமான கருத்துகள் வெளிவந்துள்ளன. அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால் உண்மையில் இப்போது வெனிசுவேலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். திருமதி ரோட்ரிகெஸ், மதுரோவின் நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா எண்ணெய் வளங்களை அணுகுவதற்காக திரு டிரம்ப்பின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதே சமயத்தில் அவரது அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் வாஷிங்டனுடன் உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் உறுதியளித்துள்ளது. வெனிசுவேலா தலைநகர் கரகாசில் வாஷிங்டனின் தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக ஜனவரி 9ஆம் தேதி அமெரிக்க அரசதந்திரிகள் அங்கு சென்று இருந்தனர். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. “வெனிசுவேலா நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறது. புதிய தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று ஜனவரி 11ஆம் தேதி அதிபரின் சிறப்பு விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் தெரிவித்தார். மதுரோவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வெனிசுவேலாவின் இடைக்காலத் தலைவராக திருமதி மச்சாடோ செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை திரு டிரம்ப் நிராகரித்து, அதற்குப் பதிலாக ரோட்ரிகெஸ் பதவியேற்பை ஏற்றுக்கொண்டபோது பலர் ஆச்சரியமடைந்தனர். இந்த நிலையில் ரோட்ரிகெசுக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்