வாஷிங்டன்: அமெரிக்கத் திட்டங்களில் தென்கொரியா கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர் (S$256.11 பில்லியன்) முதலீடு செய்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (செப்டம்பர் 30) அறிவித்தார்.
எனினும், அதன் பிறகு சோல், குறிப்பிட்ட ஓர் அம்சத்தைப் பற்றி எச்சரித்தது. அலாஸ்கா மாநிலத்தில் அமையவிருக்கும் 54 பில்லியன் டாலர் மதிப்பிலான திரவிய இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று தென்கொரியா சுட்டியது.
சென்ற ஆண்டு அமெரிக்காவும் தென்கொரியாவும் செய்துகொண்ட வணிக ஒப்பந்தத்தின்படி 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உத்திபூர்வ முதலீட்டு ஒப்பந்தத்தைத் தென்கொரியா எட்டியது. வெள்ளை மாளிகை மேற்கொண்ட தென்கொரிய முதலீடுகள் தொடர்பான அறிவிப்பு அந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி 150 பில்லியன் டாலர் கப்பல்துறை மேம்பாட்டுக்கும் 200 பில்லியன் டாலர் உத்திபூர்வ முதலீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
“எனது அரசாங்கம் தென்கொரியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதால் அந்நாடு 200 பில்லியன் டாலர் வரை (அமெரிக்காவில்) முதலீடு செய்யும்,” என்று திரு டிரம்ப் கூறினார். எட்டுப் பெரிய அணுசக்தி ஆலைகள், இயற்கை எரிவாயுக் குழாய், டெக்சஸ் மாநிலத்தில் ஆறு கிகாவாட் சக்திகொண்ட மின்சார ஆலை ஆகியவற்றைக் கட்டுவதற்கான தொகையும் அந்த முதலீட்டில் அடங்கும் என்றார் திரு டிரம்ப்.
அலாஸ்காவில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயுக் குழாய் அந்த மாநிலத்துக்கு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.
அங்கு குடியரசுக் கட்சியின் செனட்டர் டேன் சலிவன் தொடர்ந்து ஆட்சியில் இருக்க ஜனநாயகக் கட்சியின் மேரி பெல்டோலாவுடன் போட்டியிடவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு டிரம்ப் தென்கொரிய முதலீடு குறித்து அறிவித்த நிகழ்ச்சியில் திரு சலிவன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், குறிப்பிட்ட சில வர்த்தக, சட்டரீதியான நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் மட்டுமே இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தென்கொரிய அரசாங்கம் கூறியுள்ளது.
அதேவேளை, திரு டிரம்ப் முதலீடுகள் தொடர்பில் தெரிவித்த மற்ற அம்சங்களை சோல் உறுதிப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவுத் தரவு நிலையங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காக டெக்சசில் எரிவாயு மின்சார ஆலையை அமைக்க 22.3 பில்லியன் டாலரும் எட்டு அணுசக்தி ஆலைகளை அமைக்க 120 பில்லியன் டாலரும் முதலீடு செய்யப்போவதாக சோல் குறிப்பிட்டது.
