வெஸ்ட் பாம் பீச், ஃபுளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைத் தலைமை அதிகாரியாக திருவாட்டி சுசீ வைல்ஸ் என்பவரை நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பை அவர் வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்டார்.
2025 ஜனவரி 20ஆம் தேதி அதிபர் பொறுப்பை ஏற்க இருக்கும் திரு டிரம்ப், அறிவித்திருக்கும் முதல் நியமனம் இது. அத்துடன், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் முதல் பெண்மணி திருவாட்டி வைல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை அதிகாரியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் திருவாட்டி வைல்ஸ், திரு டிரம்பின் பிரசார நிர்வாகிகளில் ஒருவராகத் திறம்படச் செயல்பட்டவர்.
வெள்ளை மாறிகை தலைமை அதிகாரி என்னும் பொறுப்பு செல்வாக்குமிக்கது. அவரைத் தாண்டிதான் அதிபரைச் சந்திக்க முடியும்.
மேலும், அதிபரின் நிகழ்ச்சிகளை அவர்தான் தொகுக்க வேண்டும். இதர அரசாங்கத் துறைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளும் பொறுப்பும் அவரைச் சார்ந்தது.
வெள்ளை மாளிகைப் பணியாளர்களை நிர்வகிப்பதும் அவரே.
அவரது நியமனம் தொடர்பாக திரு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்றுள்ள மாபெரும் அரசியல் வெற்றியை அறுவடை செய்ய திருவாட்டி சுசீ வைல்ஸ் உதவி புரிந்தார்.
“மேலும், 2016 மற்றும் 2020 தேர்தல் பிரசாரங்களை வெற்றிகரமாக நிகழ்த்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்துலக அளவில் மதிக்கப்படும், புகழப்படும் சுசீ திறமையானவர், புத்தாக்கம் மிக்கவர், கடினமாக உழைக்கக்கூடியவர்.
“நமது நாட்டிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றும் திரு டிரம்ப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கை வெளியான பின்னர், வெள்ளை மாளிகையில் டிரம்ப்புக்கு திடமான, புத்திகூர்மையான ஆலோசனைகளை திருவாட்டி வைல்ஸ் வழங்குவார் என்று பலரும் கருத்துரைத்தனர்.
புதிய அமைச்சரவை பற்றிய ஊகங்கள்
இதற்கிடையே, திரு டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தில் இடம்பெறப் போவது யார் என்ற பரபரப்பு நிலவுகிறது.
2021 வரை நீடித்த அவரது முதல் தவணைக் காலத்தில் பதவிப் பொறுப்புகளில் இருந்த பலரும் மீண்டும் பதவிபெறும் திட்டத்தில் இல்லை என்றும் ஒருசில விசுவாசிகள் மட்டும் புதிய அமைச்சரவையில் இணையக்கூடும் என்றும் வதந்திகள் வலம் வருகின்றன.
முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் உறவினரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், உலகப் பணக்காரர் எலோன் மஸ்க், மத்திய உளவுத்துறை (CIA) முன்னாள் இயக்குநர் மைக் பாம்பியோ போன்றோர் திரு டிரம்ப்பின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்னும் வதந்தியும் ஊடகங்களில் பரவுகிறது.