வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்குத் தடைவிதிக்கும் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் தீர்மானம் எடுக்க, தாம் பதவியேற்ற பிறகு அதற்கு அவகாசம் தேவைப்படுவதாக டிரம்ப் வாதிட்டார்.
டிக்டாக்கின் சீன நிறுவனமான பைட்டான்ஸ், ஜனவரி 19ஆம் தேதிக்குள் டிக்டாக்கை விற்காவிட்டால், அச்செயலிக்குத் தடைவிதிக்க ஏப்ரலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் அத்தடை நீக்கக் கோரி டிக்டாக்கும் பைட்டான்சும் போராடி வருகின்றன.
டிக்டாக்கிற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை ரத்துசெய்ய அவை கோரியுள்ள வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது.
ஆனால், பைட்டான்சுக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டாலோ, டிக்டாக்கை பைட்டான்ஸ் விற்காவிட்டாலோ, டிரம்ப் பதவியேற்பதற்கு முந்தைய தினமான ஜனவரி 19ஆம் தேதி அமெரிக்காவில் டிக்டாக்கிற்குத் தடைவிதிக்கப்படலாம்.
டிரம்ப் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) தாக்கல் செய்த மனுவில், “ஒருபுறம் சுதந்திர பேச்சுரிமை. மறுபுறம் வெளிநாட்டுக் கொள்கை, தேசியப் பாதுகாப்பு குறித்த கவலை. எனவே இந்த வழக்கில் புதுவகையான சர்ச்சைகள் நிலவுகின்றன,” என்பதைச் சுட்டினார்.
அமெரிக்காவில் டிக்டாக்கை இன்னும் சிறிது காலத்திற்கு அனுமதிக்க தாம் விரும்புவதாக டிரம்ப் இந்த வாரம் கூறியிருந்தார். அதிபர் பிரசாரத்தின்போது டிக்டாக்கில் தமக்கு பில்லியன் கணக்கான பார்வைகள் கிடைத்திருந்ததை அவர் சுட்டினார்.
சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் டிக்டாக் செயலி தொடர்வதால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்க நீதித்துறை வாதிட்டுள்ளது. அதன் நிலைப்பாட்டுக்குப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

