வாஷிங்டன்: ஈரான் தூண்டுதலின்பேரில் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பையும் பிற முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகளையும் கொல்லச் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானிய ஆடவருக்கு 27 ஆண்டுகளுக்குமேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புரூக்ளின் மத்திய நீதிமன்ற நீதிபதி எரிக் ஆர் கோமிட்டி, பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயது ஆசிஃப் ரஸா மெர்ச்சன்ட்டுக்கு 330 மாதச் சிறைத்தண்டனை விதித்ததாக அமெரிக்க நீதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) அறிக்கை வெளியிட்டது.
2020ஆம் ஆண்டில் ஈரானியத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்குப் பழிவாங்கத் திரு டிரம்ப் உள்ளிட்டோரைக் கொலை செய்ய கூலிப் படையை அணுக மெர்ச்சன்ட் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், ஐக்கிய நாட்டு நிறுவன முன்னாள் தூதர் நிக்கி ஹேலி இருவரையும் கொலை செய்ய மெர்ச்சன்ட் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
டெஹ்ரானில் இருக்கும் தமது குடும்பத்தை ஈரானியப் படைகளிடமிருந்து காப்பாற்ற, அவர்களின் சதித்திட்டத்தில் விருப்பமின்றி தாம் இணைந்ததாக மெர்ச்சன்ட் சாட்சியமளித்தார்.
தாக்குதல் நடக்கும் முன்பே அமெரிக்க அமலாக்கத் துறையினர் சதியை முறியடித்தனர். மெர்ச்சன்ட் அணுகிய ஒருவர் ரகசிய உளவாளியாக மாறி அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
2024ஆம் ஆண்டில் கைதான மெர்ச்சன்ட், தாம் குற்றமற்றவர் என வாதிட்டார். அச்சதியுடன் தனக்குத் தொடர்பில்லை என ஈரான் கூறியுள்ளது.
