போர்ட்லாண்ட்: அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் அங்கிருக்கும் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க முகாமுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
அதற்கு எதிராகத் தற்பொழுது அங்கு ராணுவத்தை அனுப்பியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப். அத்துடன், குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க தேவைப்பட்டால் முழு அளவிலான ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘போர் சூழல் உள்ள போர்ட்லாண்ட்’ நகரைப் பாதுகாக்க அங்கு தேவையான ராணுவ வீரர்களை அனுப்பி வைக்குமாறு அவர் போர் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க முகாம்களை அன்டிஃபா என்ற அமைப்பு, மற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதிலிருந்து பாதுகாக்க உதவும் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “தேவைப்பட்டால், முழு ராணுவ பலத்துக்கு உத்தரவிடுகிறேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
இதன் தொடர்பில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் ராணுவம் தேவையில்லை என்று அறிவிப்பு விடுத்தனர்.
“போர்ட்லாண்டில் எந்தவொரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. இங்குள்ள சமூகங்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உள்ளன,” என்று ஒரிகன் மாநில ஆளுநர் டினா கோட்டெக் தெளிவுபடுத்தினார்.
சனிக்கிழமை செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திருவாட்டி கோட்டெக், ராணுவத்தை அனுப்புவது அதிகார விதிமீறல் என்று குறிப்பிட்டார். இதன் தொடர்பில் தான் ஒரிகன் மாநில தலைமைச் சட்ட அதிகாரியை தொடர்புகொண்டு இதற்கு எதிரான பதில் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக விளக்கினார்.