வாஷிங்டன்: ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.
அவரின் மிரட்டலைச் செயல்படுத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து, அமெரிக்காவின் நட்பு நாடுகளும் வளைகுடா நாடுகளும் தனிப்பட்ட முறையில் அவருக்கு எடுத்துரைத்தை அடுத்து அந்த முடிவை அவர் எடுத்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம் மிரட்டல் விடுத்த நடவடிக்கையிலிருந்து ஈரானுக்கு ஐந்து நாள்கள் கால அவகாசம் அளிப்பதாக மார்ச் 23ஆம் தேதி டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், டெஹ்ரானுடன் நடைபெறவுள்ள புதிய பேச்சுவார்த்தைகள் மோதலுக்குத் தீர்வு காணும் ஓர் ஒப்பந்தத்தை எட்ட உதவும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஈரானுடனான இந்த மோதல் கூடிய விரைவில் ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் எனச் சில நட்பு நாடுகள் எச்சரித்த பின்னரே திரு டிரம்ப் இந்த முடிவை எடுத்தார்.
ஈரானிய உள்கட்டமைப்பிற்கு நிரந்தர சேதத்தை விளைவித்தால், போர் முடிந்த பிறகு அந்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியாத நிலை ஏற்படும் என அவ்வட்டாரப் பங்காளித்துவ நாடுகள் திரு டிரம்ப்பிடம் தெரிவித்தன.
இந்தத் தகவல்களைப் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், தனிப்பட்ட உரையாடலின்போது புளூம்பெர்க்கிடம் கூறினர்.
திரு டிரம்ப் பின்வாங்கியதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. அது, அவரது மிரட்டல்களாலும் தொடர்ந்து நீடித்து வரும் மோதல்களாலும் நிலைகுலைந்துள்ள சந்தைகளைச் சீர்படுத்துவதாகும்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கப் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்குவதற்குச் சற்று முன்னதாகவே அதிபர் டிரம்ப்பின் அந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இது சந்தை தொடர்பான கவலைகளைக் குறைப்பதற்காகவே திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

