அமெரிக்க அதிபர் தேர்தல்: கட்சி வாக்கெடுப்புகளில் டிரம்ப், பைடன் வெற்றி

2 mins read
5dc62547-d5d5-44fa-8b97-5ef8263930a8
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (வலது), முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் இருவரும் தங்களின் தனிப்பட்ட கட்சி வாக்கெடுப்புகளில் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. - படங்கள்: ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ்

மிச்சிகன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிச்சிகனில் நடைபெற்ற அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.

இருப்பினும், ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் போருக்கு அவர் தெரிவிக்கும் ஆதரவினால், கோபமடைந்துள்ள ஜனநாயகக் கட்சியினர் நடத்திய எதிர்ப்பு வாக்கெடுப்பு, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது.

இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அம்மாநிலத்தின் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வாக்கெடுப்பை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதன் காரணமாக வெள்ளை மாளிகையின் நியமனங்களில் அவர் தமது நிலையை வலுப்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிடும் நிக்கி ஹேலி பெரிய வித்தியாசத்தில் இரண்டாம் நிலையில் வந்தார்.

திரு பைடனும் திரு டிரம்பும் தங்களின் தனிப்பட்ட கட்சி வாக்கெடுப்புகளில் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அவர்கள் இருவருக்கும் கிடைத்த வாக்கு எண்ணிக்கை மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

பெரிய அரபு அமெரிக்கச் சமூகம் வசிக்கும் மிச்சிகனில் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சீட்டுகளில் “கடப்பாடு இல்லை” என்று குறிப்பிடும்படி பைடனின் காஸா கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஜனநாயகக் கட்சியின் வாக்குகளில் கிட்டத்தட்ட பாதி எண்ணப்பட்டுள்ள நிலையில், “கடப்பாடு இல்லை” என்று குறிப்பிட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 58,000க்கும் அதிகம் என்று ‘எடிசன் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்தது. ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த 10,000ஐக் காட்டிலும் அது மிக அதிகம்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்குத் திரு பைடன் தெரிவிக்கும் ஆதரவினால், 2020ஆம் ஆண்டில் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த மிச்சிகனின் அரபு அமெரிக்கச் சமூகத்தில் உள்ள பலர் இப்போது கோபமடைந்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்