உக்ரேனில் போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் கலந்துரையாடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
வன்முறையை நிறுத்துவது பற்றிய அந்தத் தொலைபேசி அழைப்பில் பேசப்போவதாக திரு டிரம்ப், ட்ரூத் சோஷல் சமூகத் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியிடமும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் சிலருடனும் பிறகு பேசப்போவதாகவும் திரு டிரம்ப் கூறினார்.
துருக்கியில் வெள்ளிக்கிழமையன்று ரஷ்யாவும் உக்ரேனும் பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபட்டபோதும் அதில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கைதிகள் பரிமாற்றம் குறித்த உடன்பாடு மட்டும் எட்டப்பட்டது.
துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் திரு புட்டின் நேரடியாகக் கலந்துகொண்டால் தாமும் வரத் தயாராக இருப்பதாகத் திரு டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ஆனால் திரு புட்டின் கலந்துகொள்ள மறுத்தார்.
திரு புட்டினும் தாமும் நேருக்கு நேரே சந்திக்கும்போதுதான் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று திரு டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே திரு டிரம்ப்பிற்கும் திரு புட்டினுக்கும் இடையே நிகழவிருக்கும் தொலைபேசி அழைப்புக்குத் தயாராகும் பணி நடைபெற்று வருவதாக ரஷ்யத் தரப்பு உறுதி செய்துள்ளது.