தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் பொருள்களுக்கு டிரம்ப் 30% வரி விதிக்கக்கூடும்: ஆய்வாளர்கள்

2 mins read
4055e0f1-843b-43ed-9b8e-80d43d0941bc
சீனப் பொருள்கள் மீதான திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு சீனாவின் ஏற்றுமதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: புளூம்பெர்க்

நியூயார்க்: சீனப் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு, 90 நாள் நிறுத்தத்திற்குப் பிறகு, சீன ஏற்றுமதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்களும் முதலீட்டாளர்களும் கூறியுள்ளனர்.

இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், சீனா பொருளியல் ரீதியாகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டுப் (2025) பிற்பகுதிவரை சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 30 விழுக்காட்டு வரியை விதிக்கக்கூடும் என்று புளூம்பெர்க் கருத்தாய்வில் அவர்கள் முன்னுரைத்துள்ளனர்.

முன்னர் அறிவிக்கப்பட்டதைவிடக் குறைவு என்றாலும் இந்த 30 விழுக்காட்டு வரியே அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதிகளில் 70 விழுக்காட்டைத் துடைத்தொழிக்கப் போதுமானது என்று பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மே 14, 15ஆம் தேதிகளில் நடைபெற்ற கருத்தாய்வில் 22 பேர் பங்கேற்றனர். அதில், தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் திரு டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் உடனடியாக அகற்றப்படும் சாத்தியம் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

ஆறு மாத காலத்தில் 30 விழுக்காட்டிலிருந்து வரி விகிதம் குறைக்கப்படலாம் என்று பங்கேற்றோரில் ஏழு பேர் கூறியுள்ள நிலையில் ஆறு பேர் வரி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கருத்துரைத்துள்ளனர்.

ஒருவேளை இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் இறக்குமதி வரி 20 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

திரு டிரம்ப் தமது முதல் தவணைக் காலத்தில் அறிவித்த 12 விழுக்காட்டு வரி தொடரும் என்று ஆய்வாளர்கள் கூறினர். அதைக் குறைத்தால் தமது ஆதரவாளர்களின் சினத்துக்கு ஆளாகக்கூடும் என்று அவர் கருதுவார் என்பதை அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்