டிட்ராயிட்: மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வாகன ஆலையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) நேரில் சென்று பார்வையிட்டார்.
டிரம்ப், தரைத்தளத்துக்கு மேல் இருக்கும் நடைபாதையில் இருந்தபோது தரைத்தளத்தில் இருந்த ஒருவர் அவரைப் பார்த்து கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தார். அவர் டிரம்ப்பைத் தூற்றும் வகையில் பேசினார். இதைக் கேட்ட டிரம்ப், அந்த நபரைச் சுட்டிக்காட்டி, கோபத்துடன் பார்த்து வசை பாடியதுடன் முறையற்ற சைகை ஒன்றையும் காட்டினார்.
டிரம்ப்பைத் தூற்றும் வகையில் பேசியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டீவன் சியூங், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அவருக்கு டிரம்ப் தக்க பதிலடி கொடுத்ததாக அவர் கூறினார்.
குழந்தைகளைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்துபவரைப் பாதுகாப்பவர் டிரம்ப் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. எப்ஸ்டைன் ஒரு காலத்தில் டிரம்ப்பின் நண்பராக இருந்தவர்.
குறைந்த வயது பெண்களைக் கடத்தியது தொடர்பாக வழக்கு விசாரணை எதிர்நோக்கியபோது 2019ஆம் ஆண்டில் நியூயோர் சிறையில் எப்ஸ்டைன் மாண்டார். அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது.
எப்ஸ்டைன் தொடர்பான ஆவணங்களை வெளியிட டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். ஆனால் அவற்றை வெளியிட விதிக்கப்பட்டிருந்த டிசம்பர் 19 காலக்கெடு கடந்தும் அமெரிக்க நீதித்துறை அவற்றை வெளியிடவில்லை. எஃப்ஸ்டைன் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மறுஆய்வு செய்து வருவதாக நீதித்துறை அதிகாரிகள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கூறினர்.

