கைது செய்யப்பட்ட வெனிசுவேலா அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க தடுப்புக்காவலில்

வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவிப்பு

5 mins read
e785087b-efdc-4d3f-bbe1-46987993dda9
நியூயார்க் நகரில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அழைத்துச் செல்லும் அமெரிக்க அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

வாஷிங்டன்: புதிய ஆட்சி அமையும் வரை வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 63, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நியூயார்க் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார்.

வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க சிறப்புப் படை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் சனி்க்கிழமை (ஜனவரி 3) கைதுசெய்தது.

இருவரும் ஹெலிகாப்டர் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, கைகள் கட்டப்பட்டு, கண்களும் காதுகளும் மூடப்பட்ட நிலையில் உள்ள மதுரோவின் புகைப்படத்தை டிரம்ப் பகிர்ந்தார்

“பாதுகாப்பான, முறையான, நியாயமான மாற்றத்தை செய்யும்வரையில் அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்” என்று திரு டிரம்ப் ஃபுளோரிடாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் பல மாதங்களாகக் குற்றம் சாட்டி வந்தது.

“வெனிசுவேலாவின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத வேறு எவராவது அந்நாட்டைக் கைப்பற்ற அமெரிக்கா அனுமதிக்க முடியாது,” என்றார் அவர்.

சில சட்ட வல்லுநர்கள் வெளிநாட்டு சக்தி, நாட்டின் தலைவரைக் கைதுசெய்வதன் சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் அண்மைய காங்கிரஸ் கூட்டங்களில் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறிய ஜனநாயகக் கட்சியினர், அடுத்து நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

உலகின் ஆகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள வெனிசுவேலாவின் மோசமாக சீரழிந்துள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை முக்கிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் புதுப்பிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

வெனிசுவேலாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அங்குள்ள எதிர்ப்பைக் குறித்து தாம் பயப்படவில்லை என்றார்.

அமெரிக்காவால் சட்டவிரோத போதைப்பொருள், பயங்கரவாதம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள திரு மதுரோ, ஜனவரி 5ஆம் தேதி மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘கொக்கைன்’ கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவியும் எதிர்நோக்குகிறார்.

வெனிசுவேலாவை நிர்வகிப்பது குறித்த டிரம்பின் திட்டம் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், திரு மதுரோ அரசாங்கம் இன்னும் பொறுப்பில் இருப்பதுடன், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எண்ணமும் அதற்கு இல்லை.

இடைக்கால அதிபர்

இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிசை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

திரு மதுரோவின் வாரிசான வெனிசுவாலாத் துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், சனிக்கிழமை பிற்பகல் அரசுத் தொலைக்காட்சியில் மற்ற உயர் அதிகாரிகளுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். “மதுரோவே வெனிசுவேலாவின் ஒரே தலைவர்,” என்று குரல் எழுப்பினார். மதுராவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்துலகச் சட்டத்தை மதிக்க உலக நாடுகள் கோரிக்கை

ஐநா சாசனம் உட்பட அனைத்துலகச் சட்டத்தை அமெரிக்கா மீறுவதாக சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அச்செயல் அவ்வட்டாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றார் அவர்.

ஐநா பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லத்தீன் அமெரிக்கா, கரீபியன் வட்டாரத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாகச் சீனா சாடியுள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகள் அனைத்துலக சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளன.

டிரம்பின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, அது “வரலாற்று சிறப்புமிக்க துணிச்சலான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும், அனைத்துலகச் சட்டங்களுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார். டிரம்ப் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அவரை அழைத்து தமது எதிர்ப்பை தெரிவித்ததாக அவர் சொன்னார்.

பனாமாவில் உள்ள வெனிசுவேலா நாட்டினர் சனிக்கிழமை (ஜனவரி 3) மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனாமாவில் உள்ள வெனிசுவேலா நாட்டினர் சனிக்கிழமை (ஜனவரி 3) மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இபிஏ

மகிழ்ச்சியில் புலம்பெயர்ந்த மக்கள்

மதுரோ கைது செய்யப்பட்டதை அடுத்து உலகெங்கும் இடம்பெயர்ந்துள்ள வெனிசுவேலா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மைய வரலாற்றில் உலகில் அதிகளவில் புலம்பெயர்ந்த மக்களாக அவர்கள் உள்ளனர்.

“நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். சர்வாதிகாரம் வீழ்ந்தது, எங்களுக்கு இப்போது சுதந்திரமான நாடு உள்ளதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று சாண்டியாகோவில் உள்ள வெனிசுலாவே நாட்டின் திருவாட்டி காட்டி யானெஸ் கூறினார். அவர் கடந்த ஏழு ஆண்டுகளை சிலி நாட்டில் வாழ்ந்துவருகிறார்.

வெனிசுவேலாவில் சனிக்கிழமை தெருக்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்தன. படையினர் சில பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கராக்கசில் சிறிய எண்ணிக்கையில் மதுரோ ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

மற்றவர்கள் நிம்மதியை வெளிப்படுத்தினர். “எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு திரைப்படம் போல இருந்ததால் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் ஐயமாக இருந்தது,” என்று மராகே நகரில் 37 வயதான வணிகர் கரோலினா பிமெண்டல் கூறினார். “தற்போது அமைதியாக இருக்கிறது, ஆனால் எந்த நேரத்திலும் அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

அமெரிக்கா எவ்வாறு வெனிசுவேலாவைப் பொறுப்பேற்று நடத்தும் என்பது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு டிரம்ப் பதிலளிக்கவில்லை.

“மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ, தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் போன்றவர்கள் அந்நாட்டை நிர்வகிப்பார்கள் என்று திரு டிரம்ப் கூறினார்.

“எனது உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுவேலா தலைநகரில் மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டனர். முப்படைகளும் சேர்ந்து பெரியளவிலான தாக்குதலில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது.

“சட்டவிரோதி சர்வாதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் பிரமிக்க வைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது இது,” என்றார் டிரம்ப்.

தாக்குதலில் 40 பேர் பலி

அமெரிக்கத் தாக்குதலில் வெனிசுவேலாவின்மிகப் பெரிய  ராணுவக் கட்டடம் தீப்பற்றி எரிகிறது.
அமெரிக்கத் தாக்குதலில் வெனிசுவேலாவின்மிகப் பெரிய ராணுவக் கட்டடம் தீப்பற்றி எரிகிறது. - படம்: ஏஎஃப்பி

வெனிசுவேலா தலைநகரில் நடந்த அந்தத் தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெனிசுவேலா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வான் பாதுகாப்பைத் தகர்க்க 150க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் அனுப்பப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தரையிறங்கிய சிறப்பு நடவடிக்கைப் படையினர் அந்நாட்டு நேரப்படி விடியற்காலை 2 மணிக்கு மதுராவின் வளாகத்தைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். முழு நடவடிக்கைக்கும் இரண்டு மணி 20 நிமிடங்கள் ஆனது.

அதிபர் டிரம்ப்பிற்கும் அவரது ராணுவ நடவடிக்கைக்கும் எதிராக ஞாயிறன்று (ஜனவரி 4) எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சான் ஃபிரான்சிஸ்கோ மக்கள்.
அதிபர் டிரம்ப்பிற்கும் அவரது ராணுவ நடவடிக்கைக்கும் எதிராக ஞாயிறன்று (ஜனவரி 4) எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சான் ஃபிரான்சிஸ்கோ மக்கள். - படம்: இபிஏ
குறிப்புச் சொற்கள்