வாஷிங்டன்: சில நாள்களுக்கு முன்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்வதாக அறிவித்தது.
அதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன்பின்னர், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரான நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தற்காத்துப் பேசியுள்ளார்.
“ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 31 விழுக்காட்டினர் வெளிநாட்டு மாணவர்கள் என்பதை அது வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அந்த வெளிநாட்டு மாணவர்களில் சிலர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இல்லை, அவர்கள் தங்களது கல்விக்காகக் கட்டணம் செலுத்துவதும் இல்லை, கல்விக் கட்டணம் செலுத்தும்த எண்ணமும் இல்லை,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
“கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அரசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குப் பல பில்லியன் டாலர் நிதியைத் தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் நிர்வாகம் கொடுத்த நெருக்கடியால் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மேலும் அவர்களின் விசா, கல்வி உதவித்தொகை ஆகியவை தொடர்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் காஸாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த வெளிநாட்டு மாணவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் கல்விக் கழகங்களில் அமெரிக்காவுக்கு எதிரான இடதுசாரி சித்தாந்தங்கள் பேரளவில் பரவி வருவதாக அதிபர் டிரம்ப் குறைகூறி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைய வாரங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட இருந்த கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள மானியங்களை அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் முடக்கியுள்ளது.