நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகளுக்கு விதித்த 25 விழுக்காடு வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
அதிபர் டிரம்ப் இவ்வாரத் தொடக்கத்தில் கனடா, மெக்சிகோமீது 25 விழுக்காடு வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.
மேலும் இந்த நடவடிக்கை பணவீக்கம் மற்றும் பொருளியல் வளர்ச்சியை மெதுவடையச் செய்யும் என்று கவலை எழுந்திருந்த நிலையில் திரு டிரம்ப் தமது முடிவுகளை மாற்றியுள்ளார்.
இருப்பினும் கனடா, மெக்சிகோ மீதான இந்த தற்காலிக வரிவிதிப்பு நிறுத்தம் ஏப்ரல் 2ஆம் தேதி வரை தான் என்று வியாழக்கிழமை (மார்ச் 6) தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு டிரம்ப் இதற்கு முன்னர் மார்ச் 4ஆம் தேதி முதல் கனடா, மெக்சிகோ இறக்குமதிகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்றார்.
அதன்பின்னர் மார்ச் 6ஆம் தேதி மெக்சிகோவுக்கு புதிய வரிவிதிப்பு இல்லை என்றார். பின்னர் அன்று மதியம் கனடாவுக்கும் புதிய வரிவிதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வரிவிதிப்பு குறித்து வியாழக்கிழமை திரு டிரம்ப்புடன் மெக்சிகோ அதிபர் கிளவ்டியா செயின்பாம் பேசினார். அதன்பின்னர் டிரம்ப் இந்த முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனடாவும் தமது பதிலடி வரிவிதிப்பை ஏப்ரல் 2ஆம் தேதி வரை தாமதித்துள்ளது. கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகளுக்கு கனடா வரிவிதிக்கத் திட்டமிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ள நாடுகள் பட்டியலில் கனடாவும் மெக்சிகோவும் உள்ளன. அந்நாடுகளுக்கு எதிரான திரு டிரம்பின் அறிவிப்பு பலரிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியது.
இதற்கிடையே டிரம்ப் நிர்வாகத்துடன் வரிவிதிப்பு கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது சிரமமாக உள்ளதாக கனடா மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அதன் கொள்கைகளில் தெளிவு இல்லாமல் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அதிபர் டிரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகள் பலவற்றின்மீது வரி விதிப்பதாக அறிவித்து வர்த்தகப் பூசல்களைத் தொடங்கி வைத்தார்.