ஏசுநாதரைப் போன்ற உருவத்தில் டிரம்ப்; கண்டனத்துக்குப் பிறகு அகற்றப்பட்ட பதிவு

ஏசுநாதரைப் போன்ற உருவத்தில் டிரம்ப்; கண்டனத்துக்குப் பிறகு அகற்றப்பட்ட பதிவு

1 mins read
8a5c0ea4-6cd3-4c7f-9d12-e0dff571d83b
திரு டிரம்ப்பை யேசுநாதராகச் சித்திரிக்கும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: தன்னை ஏசுநாதரைப் போல் காண்பித்த ட்ரூத் சோ‌ஷியல் பதிவில் இடம்பெற்ற படத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அகற்றிவிட்டதாகத் தெரிகிறது.

பதிவுக்கு எதிராகப் பெரிய அளவில் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து பதிவு அகற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது.

படத்தில் ஏசுநாதரைப் போல் தென்படும் திரு டிரம்ப், மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட ஆடவர் ஒருவருக்கு சிகிச்சையளிப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. அது, திரு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடையே கடும் கண்டனக் குரல் எழச் செய்தது.

கத்தோலிக்க மதகுருவான போப் லியோவை விமர்சித்து நீளமானப் பதிவை வெளியிட்ட சில மணிநேரத்துக்குப் பிறகு இப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. போப் லியோ, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாகக் கண்டித்துப் பேசியவர்.

இந்தப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டதை திரு டிரம்ப் ஒப்புக்கொண்டார். படத்தில் தான் மருத்துவராகச் சித்திரிக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

படத்தில் திரு டிரம்ப்புக்குப் பின்னால் சுதந்திர தேவி சிலை, பெரிய அமெரிக்க தேசியக் கொடி, போர் விமானங்கள், கழுகு, ஒரு தாதி, இறைவழிபாட்டில் ஈடுபடும் மாது ஒருவர், ராணுவச் சீருடையில் இருப்பதுபோல் தெரியும் நபர் ஆகிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்