லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ‘மரின்’ என்று அழைக்கப்படும் போர் வீரர்களையும் 2,000க்கும் அதிகமான தேசியக் காவல் படை வீரர்களையும் பணியமர்த்தியுள்ளார்.
குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை எதிர்த்து லாஸ் ஏஞ்சலிசில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அது கடந்த சில நாள்களாக வன்முறையாக மாறியுள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிபர் டிரம்ப் போர் வீரர்களைக் களமிறக்கியுள்ளார். “வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கிட்டத்தட்ட 700 போர் வீரர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ளனர். அவர்கள் நான்கு நாள்களாக நடந்து வரும் போராட்டங்களை விரைவில் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கலிஃபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கேவின் நியூசம் போர் வீரர்களைப் பணியமர்த்தியதைக் கண்டித்துள்ளார்.
“அமெரிக்க மண்ணில் அமெரிக்க மக்களை எதிர்த்துப் போர் வீரர்களைக் களமிறக்குவது அதிபர் டிரம்ப்பின் சர்வாதிகாரத்தைக் காட்டுகிறது. இது அமெரிக்க நடவடிக்கை இல்லை,” என்று திரு கேவின் குறிப்பிட்டார்.
ஜூன் 8ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் மத்திய வட்டாரத்தில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதைக் கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 9ஆம் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது, ஆனால் வார இறுதியின் முடிவில் கைது நடவடிக்கைகள் அதிகமானதால் நிலவரம் கலவரமானது.
கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது லாஸ் ஏஞ்சலிஸ். அங்கு லத்தீன் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றபிறகு குடியேறிகள்மீது கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இது போராட்டத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.