துபாய்/டெல் அவிவ்/வாஷிங்டன்: ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதை ஏப்ரல்வரை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடனான பேச்சு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகள் ஒருதலைப்பட்சமாய் இருப்பதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
நான்கு வாரங்களாக நடந்துவரும் இந்தப் போரில், மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய பணவீக்கத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
டெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது.
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஈரான் உடன்பாட்டிற்கு வராவிட்டால் அதன்மீது நெருக்குதலை அதிகரிக்கப்போவதாகத் திரு டிரம்ப் எச்சரித்தார்.
பின்னர், ஈரானிய எரிசக்தி ஆலைகள்மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகச் சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வதந்திகள், பிறர் பரப்பிவரும் தவறான கருத்துகளுக்கு மாறாக, பேச்சு மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கின்றன,” என அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அமெரிக்காவுடன் தாங்கள் எந்தப் பேச்சிலும் ஈடுபடவில்லை என ஈரான் கூறியுள்ளது.
இந்தப் போரில், ஈரானின் உயர் அதிகாரிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், யாருடன் அமெரிக்கா பேச்சு நடத்துகிறது என்ற விவரத்தை அதிபர் டிரம்ப் வெளியிடவில்லை.

