வாஷிங்டன்: குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.
அதன்படி, பள்ளிகளிலும் தேவாலயங்களிலும் அவர்கள் இனி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அந்த இரு பகுதிகளும் இதற்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் குறிப்பிடப்பட்டன.
அமெரிக்காவின் அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஆகியவற்றில் தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்ற முன்னைய நிர்வாகத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்கக் குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரையும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளையும் தடுக்கும் அந்த உத்தரவை தற்காலிக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் ஹஃப்மன் நீக்கினார்.
கைது நடவடிக்கையைத் தவிர்க்க, குற்றவாளிகள் இனி அமெரிக்காவின் பள்ளிக்கூடங்களிலும் தேவாலயங்களிலும் இனி ஒளிய முடியாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
“நமது சட்ட அமலாக்க அதிகாரிகளின் கைகளை டிரம்ப் நிர்வாகம் கட்டிப்போடாது. மாறாக, பொது அறிவைப் பயன்படுத்தும் வகையில் அவர்களை நிர்வாகம் நம்பும்,” என்றார் அவர்.
இதற்கிடையே, சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை அமெரிக்கா முழுவதும் தொடங்கி நடைபெறுவதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரி டோம் ஹோமன், செவ்வாய்க்கிழமை சிஎன்என் தொலைக்காட்சியிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், எந்தெந்தப் பகுதிகளில் இதுவரை சோதனை நடைபெற்றன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.