வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலகின் செல்வந்தர்களுக்காகப் புதிய விசா திட்டத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குக் குடியேறி, நிரந்தரவாசத் தகுதியைப் பெறுவதற்கு அவர்களை ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம்.
“பணக்காரர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அதிகப் பணம் கொடுக்கப்போகிறார்கள்,” என்று திரு டிரம்ப் சொன்னார். வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) புதிய விசா திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
புதிய திட்டத்தின் விவரங்கள் இணையத்தளமொன்றில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி தனிமனிதர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து “டிரம்ப் தங்க அட்டையுடன்” அந்நாட்டின் நிரந்தரவாசத் தகுதியைப் பெறலாம்.
விரைவில் பிளாட்டின அட்டையும் கிடைக்கும். அதற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். அதனைப் பெறுவோர் அமெரிக்காவில் 270 நாள்கள் இருக்கலாம். அமெரிக்காவில் ஈட்டாத வருவாய்க்கு அவர்கள் வரிசெலுத்த வேண்டியதில்லை.
ஊழியருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் எனும் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் நிறுவனத்தாரும் நிரந்தரவாசத் தகுதியைப் பெறலாம்.
எவ்வளவு விரைவில் விசாக்கள் வழங்கப்படும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
புதிய திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குடிநுழைவுத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டுத் திறனாளர்கள் எச்-1பி (H-1B) விசாவுக்கு விண்ணப்பிக்க இனிமேல் 100,000 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
விசா திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது நோக்கம் என்று உத்தரவு குறிப்பிட்டது. கட்டணம் செலுத்தவில்லை என்றால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்றும் அது சொன்னது.
எச்-1பி திட்டத்தைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிபுணத்துவ வேலைகளுக்கு ஆள்களை எடுக்கப் பரவலாகப் பயன்படுத்துகின்றன.
அமேசான் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு 10,000க்கும் மேற்பட்ட எச்-1பி விசாக்கள் கிடைத்துள்ளன. மைக்ரோசாஃப்ட், மெட்டா நிறுவனங்கள் தரப்புக்கு 5,000க்கும் அதிகமான விசாக்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கக் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகள் துறை அந்தத் தகவல்களை வெளியிட்டது.