டிரம்ப்பிற்கு கால் வீக்கத்தை ஏற்படுத்தும் நரம்புக் கோளாறு

டிரம்ப்பிற்கு கால் வீக்கத்தை ஏற்படுத்தும் நரம்புக் கோளாறு

1 mins read
18c586da-564b-44d9-9d72-47d485794e7f
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: நரம்புப் பிரச்சினை காரணமாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இடது கால் கீழ்ப் பகுதியில் வீக்கமும் வலது கையில் தடிப்பும் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தது.

திரு டிரம்ப்பின் கணுக்கால்கள் வீங்கியிருந்ததையும் அவர் கையில் ஏற்பட்ட தடிப்புகள் ஒப்பனையால் மறைக்கப்பட்டிருந்ததையும் காட்டும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை இத்தகவலை வெளியிட்டது.

அவ்விரு பிரச்சினைகளும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கேரொலின் லீவிட், செய்தியாளர் கூட்டத்தின்போது திரு டிரம்ப்பின் மருத்துவர் தந்த கடிதத்தை வாசிக்கும்போது குறிப்பிட்டார்.

திரு டிரம்ப்பின் காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் பொதுவாகப் பலருக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும் பலமுறை கைகுலுக்குவதால் அவர் கையில் தடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் திருவாட்டி லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பிரச்சினைகளைக் காட்டும் படங்கள் வெளியானவுடன் 79 வயது டிரம்ப் மோசமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அத்தகைய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளை மாளிகை இவ்விரங்களை வெளியிட்டது.

சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து திரு டிரம்ப் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவரின் மருத்துவரும் அமெரிக்கக் கடற்படை அதிகாரியுமான டாக்டர் ‌ஷோன் பார்பரெல்லா கடிதத்தில் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தை திருவாட்டி லீவிட் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்துக்குப் பிறகு வெள்ளை மாளிகை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்