பட்லர்: தம்மீது கொலை முயற்சி நடந்த இடத்திலேயே திரு டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று (அக்டோபர் 5) மீண்டும் பிரசாரக் கூட்டம் நடத்தினார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லர் நகரில் கடந்த ஜூலை மாதம் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது திரு டிரம்ப் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட தோட்டா குறி தவறியதால் திரு டிரம்ப் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தாம் என்றுமே விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபரும் இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான திரு டிரம்ப் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
“சரியாக 12 வாரங்களுக்கு முன்பு மாலை வேளையில் இதே இடத்தில் ஈவிரக்கமில்லாத கொலையாளி ஒருவர் என்னை செயலிழக்கச் செய்ய முயற்சி செய்தார்,” என்று திரு டிரம்ப் ஆங்கிலத்தில் கூறியபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அலறி ஆதரவு தெரிவித்தனர். திரு டிரம்ப் நின்றுகொண்டிருந்த மேடையில் அவருக்கு முன்னால் தோட்டாக்களிலிருந்து பாதுகாப்பு தரும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது.
“நான் என்றும் விட்டுக்கொடுக்கவோ வளைந்துகொடுக்கவோ உடைந்துபோகவோ மாட்டேன்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு திரு டிரம்ப், தம் மீதான கொலை முயற்சி நடந்த இடத்தில் பிரசாரம் செய்தார்.