வாஷிங்டன்: உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்புக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் அந்நாட்டின் எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதால், இந்தியப் பொருள்கள்மீது 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) உத்தரவிட்டார்.
வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, இந்த வரி மூன்று வாரங்களில் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நடைமுறைக்கு வரும் மற்றொரு 25 விழுக்காட்டு வரியுடன் இது சேர்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்கு முக்கிய ஏற்றுமதித் துறைகளான துணிகள், காலணிகள், ரத்தினங்கள், நகைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வரிகள் காரணமாக, பிரேசிலுடன் சேர்ந்து அதிக வரிச்சுமையை இந்தியா எதிர்கொள்ளும். வியட்னாம், பங்ளாதேஷ் போன்ற வட்டார நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
‘ரஷ்யக் கூட்டமைப்பின் எண்ணெயை நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்யும்’ பிற நாடுகளுக்கும் இந்த உத்தரவு தண்டனை விதிக்கப்படக்கூடும் என்பதுபோல் தெரிகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” என்று தெரிவித்துள்ளது.
“பல நாடுகளும் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக, இந்தியாமீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கத் தேர்ந்தெடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்றும் அமைச்சு கூறியுள்ளது.