நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மியன்மார், லாவோஸ் ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கும் சிரியாவுக்கும் கடுமையான வரியை விதித்துள்ளார்.
மியன்மாருக்கும் லாவோசுக்கும் தலா 40 விழுக்காடும் சிரியாவுக்கு 41 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த நாடுகளின் பொருள்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும்போது இந்த அளவுக்கு அதிகமான வரிகள் வசூலிக்கப்படும்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்கு அமெரிக்கா விதித்த பொருளியல் தடை இன்னும் நீடிக்கிறது.
அதேபோல, சீனாவுடன் லாவோஸ் மிக நெருக்கமான உறவு கொண்டிருப்பதை அமெரிக்கா கண்டுணர்ந்தது.
சிரியா அதன் முன்னைய அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவால் தண்டிக்கப்பட்ட நாடு.
மியன்மார்-அமெரிக்கா இடையே கடந்த ஆண்டு US$734 மில்லியன் (S$947 மில்லியன்) மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் அதிகமான வரி மியன்மாருக்குப் பொருளியல் சுமையை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜனநாயக ஆட்சிமுறையை ஒழித்து, பதவிக்கு வர நான்காண்டுகளுக்கு முன்னர் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் வன்முறையில் ஈடுபட்டதால் அதன் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா பொருளியல் தடை விதித்தது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா கடந்த ஆண்டு US$40.4 மில்லியன் மதிப்புள்ள பொருள்களை லாவோசுக்கு ஏற்றுமதி செய்தது. அதேவேளை லாவோசிலிருந்து US$803.3 மில்லியன் மதிப்புள்ள பொருள்களை அது இறக்குமதி செய்தது.
சீனாவை பொருளியல் ரீதியாக மியன்மார் சார்ந்திருப்பது மற்றும் சீன உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள பெருகிவரும் கடன் ஆகியவை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
ஒப்புநோக்க, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பவும் அதன் புதிய அரசாங்கத்தை ஆதரிக்கவும், அதன் மீதான தடைகளைத் தளர்த்தும் நிர்வாக உத்தரவில் திரு டிரம்ப் அண்மையில் கையெழுத்திட்டார்.
அதிக வரிவிதிப்புக்கு ஓர் எளிய காரணம் இருக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த மூன்று நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் பெரிய நாடுகளில் கவனம் செலுத்த வழிவகுத்திருக்கூடும் என்று நான் கருதுகிறேன்,” என்று சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட வர்த்தகக் கொள்கைகளைக் கண்காணிக்கும் ‘செயிண்ட் கேலன் எண்டோவ்மென்ட் ஃபார் ப்ராஸ்பெரிட்டி த்ரூ டிரேட்’ குழுவின் நிறுவனர் டாக்டர் சைமன் ஈவெனெட் கூறினார்.

