கூடுமானவரை போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது டிரம்ப்பின் எண்ணம்: ருபியோ

1 mins read
5a8d67bd-6d9f-4b77-883f-be0fb719673d
உக்ரேனின் கார்கிவ் நகரில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்று. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: ர‌ஷ்யா-உக்ரேன் போரை கூடுமானவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் எண்ணம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேய் சிபிஹாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது திரு ருபியோ அவ்வாறு சொன்னார்.

“கூடுமானவரை போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப் எண்ணம் கொண்டுள்ளதையும் நீண்டகாலம் நிலைக்கக்கூடிய அமைதியை எட்டுவதற்கு எல்லா தரப்பினரும் முயற்சி எடுக்கவேண்டும் என்பதையும் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்,” என தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்தத் தொலைபேசி அழைப்புக்கு முதல் நாள், திரு ருபியோ, போர் குறித்து பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ‌ஷோன்-நோவெல் பேரட்டுடன் தொலைபேசிவழி பேசியதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

மூவாண்டுகளுக்கு முன்பு ர‌ஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து போர் மூண்டது. அதை முடிவுக்குக் கொண்டுவர தாம் எண்ணம் கொண்டுள்ளதாக திரு டிரம்ப் கூறியிருக்கிறார். அதேவேளை, ஐரோப்பிய கண்டம், அதன் பாதுகாப்பைப் பொறுத்தவரை மேலும் பொறுப்பாகச் செயல்படவேண்டும் என்றும் திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்