டிரம்ப்-கிம் சந்திப்பு முயற்சி தோல்வி; வடகொரிய நிபந்தனைகளால் முட்டுக்கட்டை

டிரம்ப்-கிம் சந்திப்பு முயற்சி தோல்வி; வடகொரிய நிபந்தனைகளால் முட்டுக்கட்டை

கோப்புப் படம்: ஏஎஃப்பி

22 Nov 2026 - 8:02 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது அண்மைய ஆசியப் பயணத்தின்போது வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க முயன்றார். ஆனால், பியோங்யாங் முன்வைத்த நிபந்தனைகளை வாஷிங்டன் ஏற்காததால் உச்சநிலைச் சந்திப்பு நடைபெறவில்லை என்று வால் ஸ்திரீட் ஜர்னல் நாளிதழ் சனிக்கிழமை (நவம்பர் 21) செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், வடகொரியா விதித்த நிபந்தனைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. நவம்பர் தொடக்கத்தில் நடந்த இடைத்தவணைத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் திரு டிரம்பின் அரசியல் செல்வாக்கு சரிந்துள்ளது. இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசதந்திரச் சாதனை படைக்கும் முயற்சியாக திரு கிம்முடனான உச்சநிலைச் சந்திப்பை நிகழ்த்த அவர் விரும்பினார்.

ஆசியான் தொடர்பான கூட்டங்களுக்காகப் பிலிப்பீன்சுக்கும், ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டிற்காகச் சீனாவிற்கும் அமெரிக்க அதிபர் சென்றிருந்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகப் போர் நிறுத்தத்தில் உள்ள 1950-1953 கொரியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், அணுவாயுதத் திட்டத்தைக் கலைக்கக் கோராமல் அணு ஆயுதச் சோதனைகள், ஏவுகணை ஏவுதல்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். அரசதந்திர உறவுகளின் முதல் படியாகத் தொடர்பு அலுவலகம் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

2018, 2019ஆம் ஆண்டுகளில் மூன்று முறை திரு கிம்மைச் சந்தித்த திரு டிரம்ப், 2025ல் அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் பதிலில்லை. பின்னர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான (ஐநா) வடகொரியாவின் தூதரக அதிகாரியிடம் வழங்கப்பட்ட திரு டிரம்ப்பின் கடிதமும் ஐநா கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதியிடம் திறக்கப்படாமலேயே திருப்பித் தரப்பட்டது.

குறிப்புச் சொற்கள்