தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்கத் திட்டங்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவரிக்கவுள்ளார் டிரம்ப்

2 mins read
3cae4fc5-dd2e-4992-aeb9-a20c0534dd29
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மார்ச் 4ஆம் தேதி இரவு 9 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி மார்ச் 5ஆம் தேதி காலை 10 மணி) முக்கிய உரையாற்ற உள்ளார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர் முன்னிலையில் நிகழ்த்த உள்ள முக்கிய உரையில் அமெரிக்காவுக்கும் உலகத்துக்குமான தமது தொலைநோக்கு இலக்கை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மார்ச் 4ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விவரிக்க உள்ளார்.

அதிபர் பதவி ஏற்று ஆறு வாரங்களே ஆகியுள்ள நிலையில், இரவு ஒன்பது மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி மார்ச் 5ஆம் தேதி காலை 10 மணி) அவர் அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடத்தில் தமது உரையை நிகழ்த்த உள்ளார்.

அதிபராகத் தமது முதல் 43 நாள்களில் வெளியிடப்பட்ட அதிகப்படியான நிர்வாக ஆணைகளைப் பற்றிப் பேசிய பிறகு தமது தவணைக்காலத்தில் இனி வரவிருப்பது குறித்தும் திரு டிரம்ப் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தமது நிர்வாகத்தின் வெற்றிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தமது திட்டத்தை அதிபர் எடுத்துரைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக முன்னாள் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் டிரம்ப்பின் விசுவாசியுமான அலபாமா செனட்டர் டோமி டியூபர்விள் இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.

“ஒன்று மட்டும் நிச்சயம். அதிபர் ஜோ பைடனுக்குக் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த கோமாளித்தனத்திலிருந்து இது பெரிதும் வேறுபட்டிருக்கும்,” என்றார் அவர்.

நட்புநாடுகளுடன் உள்ள உறவில் அழுத்தம் ஏற்பட்டாலும்கூட ‘மீண்டும் அமெரிக்காவை உச்சத்துக்குக் கொண்டுசெல்வோம்’ என்ற அதிபரின் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த திரு டிரம்ப்பும் அவரின் கோடீஸ்வர ஆலோசகர் இலோன் மஸ்க்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூட்டாட்சி அமைப்புகளை நீக்குதல், ஆயிரக்கணக்கில் அரசாங்க ஊழியர்களைப் பதவிநீக்கம் செய்தல், கள்ளக்குடியேறிகளைப் பிணைப் பிடித்தல், கனடாவை முற்றுகையிடுவது குறித்து வெளிப்படையாகப் பேசுதல் எனப் பதவி ஏற்றதை அடுத்து வரிசையாக திரு டிரம்ப் தமது காய்களை நகர்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து, திரு டிரம்ப் அண்மையில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பகிரங்கமாக மோதியது, அமெரிக்காவின் அணுகுமுறையில் ஓர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளதற்கு மற்றுமோர் உதாரணம்.

“அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது,” என்று திரு டிரம்ப் தமது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டதை அவரின் ஆதரவாளரான அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் மைக் ஜான்சன் மீண்டும் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். திரு டிரம்ப் ‘அமெரிக்காவுக்கு முதன்மை’ என்ற தமது இலக்கு குறித்து காங்கிரசுடன் பகிர்ந்துகொள்ள ஜனவரியில் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்