வாஷிங்டன்: 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் விவாத மேடை நிகழ்ச்சியில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
‘பாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனம் ஆகஸ்ட் 23ஆம் தேதி அந்த விவாத மேடை நிகழ்ச்சியை ஏற்று நடத்தவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் களமிறங்க நினைப்போர் தங்களுக்குள் விவாதிப்பதை வாக்காளர்கள் முதல்முறை காணும் வாய்ப்பை அது வழங்கும்.
ஆனால், ‘பாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனம் தமக்கு எதிராகச் செயல்படக்கூடியது என்று கூறிய திரு டிரம்ப், அதிபர் தேர்தலுக்கானக் கருத்துக்கணிப்பில் தம்மைவிட மிகவும் பின்தங்கி இருப்போருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும் விவாத நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளில் தாம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிடுவதாகக் கூறினார்.

