வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபை வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் அந்தப் பேச்சு நடைபெறும் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கிய பிறகு சந்திப்பு இடம்பெறுகிறது.
அண்மை மாதங்களில் அமெரிக்க-பாகிஸ்தான் உறவு மேம்பட்டுள்ளது. ஆசிய வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்கப் பாகிஸ்தானின் வைரியான இந்தியாவால்தான் முடியும் என்று வாஷிங்டன் கருதுகிறது.
ஆனால் புதுடெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. அமெரிக்கா இந்தியப் பொருள்களுக்குக் கூடுதல் தீர்வைகளை விதித்தது, இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியது, மே மாதம் இந்திய-பாகிஸ்தான் போரை நிறுத்த உதவியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் சொன்னது முதலியவை அதற்கான முக்கியக் காரணங்கள்.
ஜூலை 31ஆம் தேதி அமெரிக்காவும் பாகிஸ்தானும் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டதாக அறிவித்தன. அதன்படி அமெரிக்கா, பாகிஸ்தானியப் பொருள்களுக்கு 19 விழுக்காட்டுத் தீர்வையை விதிக்கும். இந்தியாவுடன் அமெரிக்கா இன்னும் தீர்வை குறித்த உடன்பாட்டைச் செய்துகொள்ளவில்லை.
நோபெல் அமைதிப் பரிசுக்காகத் திரு டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்தது பாகிஸ்தான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றத்தைத் தணிக்க அவர் உதவியதாகப் பாகிஸ்தான் சொல்கிறது. ஆனால் திரு டிரம்ப் சமரசம் செய்ததாகக் கூறிவருவதை இந்தியா ஏற்கவில்லை.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்துக்கு இடையே முஸ்லிம் நாடுகளின் தலைவர்களோடு திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பேச்சு நடத்தினார். அதில் திரு ஷரிஃபும் கலந்துகொண்டார்.
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அமைதியைக் கொண்டுவர அமெரிக்கா முன்வைக்கும் திட்டங்கள் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக வாஷிங்டன் தெரிவித்தது.