வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அந்நாட்டில் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
அரசாங்கம் நிதி வழங்குவது குறித்து திரு டிரம்ப் நாடாளுமன்றத்தில் அவர்களைச் சந்திக்கவுள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்தார். அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கான நிதி வழங்குவதன் தொடர்பில் முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) வரை கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை திரு டிரம்ப் சந்திப்பார்.
முன்னதாக, இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம் ஜெஃப்ரீஸ், சக் ஷுமர் ஆகியோரைச் சந்திப்பதற்கான திட்டத்தை திரு டிரம்ப் ரத்து செய்திருந்தார். பிறகு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சந்திப்பை அவ்விருவரும் சனிக்கிழமையன்று கூட்டறிக்கை மூலம் தெரிவித்தனர்.
“அரசாங்கச் செயல்பாடுகள் முடங்கிப்போவதைத் தவிர்க்க நாங்கள் அசையாத மனவுறுதியுடன் இருக்கிறோம்,” என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத் துறை, 1981ஆம் ஆண்டுக்குப் பிறகு 15வது முறையாகப் பாதி அளவில் முடங்கிப்போகும் விளிம்பில் உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கு வழங்கவேண்டிய நிதி குறித்து அரசியல் தலைவர்களிடையே ஒப்பந்தம் எட்டப்படாததைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது. அத்தொகை, 7 டிரில்லியன் டாலரில் (9 டிரில்லியன் வெள்ளி) கிட்டத்தட்ட கால் பங்கு இருக்கும்.

