வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகவிருக்கும் டோனல்ட் டிரம்ப், ஜப்பானின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் துணைவியார் அக்கி அபேயைச் சந்திருக்கவிருக்கிறார்.
ஃபிளாரிடாவில் உள்ள டிரம்ப்பின் உல்லாசத் தலத்தில் தனிப்பட்ட இரவு விருந்து, டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று தகவலறிந்த நபர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
டிரம்ப் வரும் ஜனவரி இருபதாம் தேதி பதவியேற்பதற்கு முன், ஜப்பான் அவருடன் இணக்கமான உறவுகளை ஏற்படுத்த நோக்கம் கொண்டுள்ள நிலையில், அந்தச் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பானின் ஆக முக்கியமான பொருளியல், பாதுகாப்புப் பங்காளியாக உள்ளது. அதேவேளை, ஜப்பான் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும் திகழ்கிறது.
ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா கடந்த நவம்பர் மாதம் பிரேசிலில் நடந்த ஜி-20 மாநாட்டுக்குப் பிறகு, அமெரிக்கா சென்று டிரம்ப்பைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.
டிரம்ப்பின் 2016ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, அவர் சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் திரு அபே. வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் முதல் தவணைக்காலத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே வலுவான உறவு நிலவியது.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஜப்பானில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட திரு அபேயைப் பற்றி டிரம்ப் அடிக்கடி பிரியத்துடன் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, திருவாட்டி அபேக்கு எந்தவோர் அரசாங்கப் பதவியும் இல்லை என்றபோதும், ஜப்பானுக்கும் டிரம்ப்புக்கும் இடையிலான பாலமாக அவர் சேவையாற்றியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது கணவர் கொல்லப்பட்டதிலிருந்து, டிரம்ப் அடிக்கடி திருவாட்டி அபேயைத் தொடர்புகொள்வதாக ‘சிஎன்என்’ படைப்பாளர் கெய்ட்லன் கோலின்ஸ் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், டிரம்ப்பின் துணைவியாரான மெலனியா டிரம்ப்பும் இரவு விருந்தில் கலந்துகொள்வார் என்று திருவாட்டி கோலின்ஸ் கூறினார்.