வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோவைச் சிறைப்பிடித்த சிறப்புப் படை வீரர்களை நேரில் சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலாத் தலைநகர் கராக்காஸில் இவ்வாண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா தொடுத்த அதிரடி ராணுவ நடவடிக்கையின்போது திரு மதுரோ பிடிபட்டார்.
வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிரேக் ராணுவத் தளத்தில் ராணுவ வீரர்களைத் திரு டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்பும் சந்திக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி வெனிசுவேலா தலைநகருக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படை வீரர்கள் அந்நாட்டு அதிபர் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோர்சையும் சிறைப் பிடித்தனர்.
வீரர்கள் நடத்திய தாக்குதலில் 83 பேர் மாண்டதுடன் 112க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அமெரிக்க வீரர்கள் வெனிசுவேலா ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெனிசுவேலா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தாக்குதலின்போது அமெரிக்க வீரர்களிடையே மரணம் நிகழவில்லை.
வெனிசுவேலாமீது ‘ஆப்பரேஷன் அப்சலியூட் ரிசோல்வ்’ (Operation Absolute Resolve) நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் திரு டிரம்ப்பும் அவரது மனைவியும் நேரில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவிக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை சொன்னது.
சிறைப்பிடிக்கப்பட்ட திரு மதுரோ தற்போது அமெரிக்கத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்மீது போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. திரு மதுரோ அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நியூயார்க்கில் திரு மதுரோ மார்ச் 17ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவிருக்கிறார்.
திரு மதுரோவுக்கு எதிராக நடைபெற்ற ராணுவ நடவடிக்கை அமெரிக்காவின் படைப் பலத்துக்குச் சிறந்த உதாரணம் என்று திரு டிரம்ப் இதற்குமுன் தெரிவித்தார்.
வெனிசுவேலாமீது பயன்படுத்தப்பட்ட ரகசிய ஆயுதம் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், அது குறித்து கூடுதல் தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

