தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கத் தாக்குதலில் ஹுதிப் போராளிகள் 31 பேர் பலி

2 mins read
ae30e030-51be-4b36-a19d-e4d818e031a2
பெயர் குறிப்பிடப்படாத இடத்திலிருந்து அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஹூதிப் போராளிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஹூதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிப் போராளிகள்மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16ஆம் தேதி) தீவிரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக வரும் கப்பல்களை ஹூதிப் போராளிக் குழு தாக்குதல் நடத்தி வந்தது. அதற்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிபர் டிரம்ப், செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள்மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் வானம் இடிந்ததுபோன்ற தாக்குதல் அவர்கள்மீது மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

மேலும், ஹூதிப் போராளிகளுக்கு ஆதரவு தரும் ஈரானையும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அந்த ஆதரவை ஈரான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதில் தமது நாட்டுக்கு எதிராக ஈரான் செயல்படத் தொடங்கினால் அதற்குப் பின் அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை நன்றாக இராது என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தத் தாக்குதல் அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் என்று வருணிக்கப்படுகிறது. அத்துடன், இது பல வாரங்கள் நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஈரான்மீது அமெரிக்கா தடைகள் விதித்து அதன் அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வர ஈரானை நெருக்கிவரும் நிலையில் இந்தத் தாாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஹூதிப் போராளிக் குழுவின் சுகாதார அமைச்சு கூறியது.

இந்தத் தாக்குதலை போர்க்குற்றம் என்று கூறிய ஹூதி குழு, இதற்கு தக்க பதிலடி கொடுக்க ஹூதிப் படையினர் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தது.

இதற்கு முன்னர் ஹூதி அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய முன்னைய அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கம் ஹூதி போராளிக் குழு செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படுவதை நிறுத்தும் குறிக்கோளுடன் செயல்பட்டது. அதனால் முந்தைய தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட அளவுடன் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

தற்போதைய தாக்குதல் குறித்து கருத்துரைத்த பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், அதிபர் டிரம்ப் ஹூதிப் போராளிக் குழுவுக்கு எதிராக கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்