வாஷிங்டன்: ஈரான்மீது புதிய தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 8) உத்தரவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை ஈரான் தொடர்ந்து தாக்கினால், மோசமான விளைவுகளை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
அமெரிக்க மத்திய தளபத்தியம் புதிய தாக்குதல்கள் குறித்து அறிவித்த பிறகு, ஈரானின் தென்கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்தது.
கிஷ் தீவுக்கு மேலே போர்விமானங்கள் பறந்தன. பண்டார் அபாஸ், கோனார்க், சபஹார் முதலிய நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“நேற்று கப்பல்கள்மீது ஈரான் நடத்திய குண்டுவீச்சுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது. ஈரான் மீண்டும் தாக்கினால், நிலைமை இன்னும் மோசமாகும்,” என்று திரு டிரம்ப் அவரின் ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவிட்டார்.
ஈரானுக்கு எதிராகத் தாக்குதலுக்கு உத்தரவிட்டபோதும் திரு டிரம்ப், அண்மை ராணுவ நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். பேச்சுவார்த்தைக்கான கதவைத் திறந்துவைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரானியப் படைகள் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் ஈரானின் ஆற்றலைக் குறைக்கவே தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.
வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான அண்மைத் தாக்குதல்களுக்கு ஈரானை அமெரிக்கா பொறுப்பேற்கச் செய்யும் என்று அது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
அண்மைத் தாக்குதல்களுக்கு உத்தரவிடும் முன்னர், அமெரிக்க அதிபர், ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட சண்டைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.
பதில் தாக்குதல்
இதற்கிடையே, ஈரானின் தெற்குக் கடற்கரை மற்றும் கிழக்கு மாநிலங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய ஆயுதப் படைகள் வியாழக்கிழமையன்று (ஜூலை 9) அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகளைத் தாக்கின. இது, மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் அமைப்புகளையும், கத்தாரில் உள்ள முன் எச்சரிக்கை தளம் ஒன்றையும், பஹ்ரேனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கையும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய ராணுவம், அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

