வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள டோனல்ட் டிரம்ப், நாடாளுமன்றக் கலவரத்தில் தொடர்புடைய ஏறத்தாழ 1,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். அந்தத் தோல்வியை ஏற்காத அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாதங்கள் கழித்து 2021 ஜனவரி 6ஆம் தேதி ‘கேப்பிட்டல்’ எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். டிரம்ப்பின் தோல்வியை நாடாளுமன்றம் அறிவிப்பதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினருடன் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திங்கட்கிழமை (ஜனவரி 20) பொது மன்னிப்பை அறிவித்த அதிபர் டிரம்ப், “இன்றிரவே அவர்கள் வெளியே வருவார்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார்.
சிறையில் உள்ள பலரின் தண்டனைக் காலம் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிபரின் கருத்தை உறுதிசெய்யும் வகையில், சில கைதிகள் இரவோடு இரவாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை பேச்சாளர் கூறினார்.
கலவரத்தின்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தமது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டிரம்ப் பொதுமன்னிப்பை அறிவித்துள்ளார்.
2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
நான்காண்டுகளுக்கு முன்னர், தமக்கு ஆதரவான கலவரம் நடைபெற்ற அதே ‘கேப்பிட்டல்’ நாடாளுமன்றக் கட்டடத்தில் திங்கட்கிழமை டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.