ஸ்காட்லந்து: அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ளாத நாடுகளில் பெரும்பாலானவற்றுக்கு விரைவில் 15 விழுக்காடு முதல் 20 வழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் அவர் அறிவித்த 10 விழுக்காட்டு வரியைவிட அது அதிகம். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குப் புதிய வரி பொருந்தும்.
ஏறக்குறைய 200 நாடுகளுக்குத் தமது நிர்வாகம் “உலக வரி” விகிதம் குறித்துத் தெரிவிக்கும் என்றார் திரு டிரம்ப்.
ஸ்காட்லாந்தில் அமெரிக்க அதிபர் அவரின் டர்ன்பெர்ரி உல்லாசத்தலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“புதிய வரி 15 அல்லது 20 விழுக்காடாக இருக்கும்,” என்றார் அவர்.
நெடுங்காலம் நீடிக்கும் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரக் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் சூளுரைத்திருந்தார். பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளுக்கு வரி விகிதம் 50 விழுக்காட்டைத் தொடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வரும் ஆகஸ்ட் மாதம் அது நடப்புக்கு வருகிறது.
திரு டிரம்ப்பின் அறிவிப்புகளைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான், கனடா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டன.
அமெரிக்க அதிபர் ஜூலை 27ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். அதன்படி ஒன்றியத்தின் பெரும்பாலான பொருள்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும்; ஐரோப்பிய நிறுவனங்கள் அடுத்த மூவாண்டுகளில் அமெரிக்காவில் US$600 பில்லியன் (S$770 பில்லியன்) பெறுமான முதலீடுகளைச் செய்யவேண்டும்; US$750 பில்லியன் மதிப்புடைய எரிசக்தியை வாங்கவேண்டும்.
கடந்த வாரம் ஜப்பானுடன் US$550 பில்லியன் பெறுமான உடன்பாட்டைச் செய்துகொண்டது அமெரிக்கா.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டன், இந்தோனீசியா, வியட்னாம் முதலிய நாடுகளுடனும் வாஷிங்டன் சிறிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.