அமெரிக்க-சீன உறவைப் பாராட்டினார் டிரம்ப்

அமெரிக்க-சீன உறவைப் பாராட்டினார் டிரம்ப்

படம்: இபிஏ

25 Sep 2026 - 10:08 am

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைப் பாராட்டியிருக்கிறார்.

தாமும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் வெவ்வேறு அமைப்புகளைப் பிரதிநிதிப்பதைப் புரிந்துகொண்டுள்ளதாக அவர் கூறினார். இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான பிணைப்பு நீடிக்கிறது என்றும் இதற்கு முன்பு தாங்கள் இருவரும் இந்த அளவுக்குச் சிறப்பாகச் சேர்ந்திருந்ததில்லை என்றும் திரு டிரம்ப் தெரிவித்தார்.

“நாம் ஒன்றிணைந்து, எதிர்காலச் சந்ததியினருக்குச் செழிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகின்ற உறவைத் தொடர்ந்து கட்டியெழுப்ப முடியும்,” என்றார் அவர்.

நவம்பர் இடைத் தவணைக்காலத் தேர்தலுக்கு முன்னர், ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர்களை, ‘கம்யூனிஸ்டுகள்’ என்று திரு டிரம்ப் கண்டித்திருந்தபோதிலும் அமெரிக்காவுக்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டுள்ள திரு ஸியைக் கவர ஆகச் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் நுழைவது குறித்த சர்ச்சை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. அதற்கு இடையிலும் தைவான், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பதற்றம் குறித்துத் தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 24) பிற்பகலில் வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டுள்ள அதிபர்கள் இடம்பெறும் படங்களைச் சீன அதிபருக்குக் காண்பித்தார் அமெரிக்க அதிபர். முக்கியமாக அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை திரு ஸிக்கு எடுத்துக்கூறுவதில் திரு டிரம்ப் கவனம் செலுத்தினார்.

திரு ஸி பேசியபோது, “அதிபர் டிரம்ப் ’அமெரிக்காவை மீண்டும் ஆகச் சிறந்ததாக்குவேன்’ என்று உறுதியளித்துள்ளார்,” என்றும், “சீனா ‘சிறந்த தேசிய மறுமலர்ச்சியை’ அடைவதில் உறுதியாக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு இலக்குகளும் லட்சியத்துடன் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவை நிச்சயமாக ஒன்றையொன்று வலுப்படுத்துபவையாக இருக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசீனாஅதிபர்டோனல்ட் டிரம்ப்ஸி ஜின்பிங்உச்சநிலை மாநாடு