ரஷ்யாவுக்கு அமைதியில் நாட்டம் இருக்கிறதா: டிரம்ப் மனமாற்றம்

2 mins read
9cb13579-8442-42e6-8afb-dab6f902ca9d
இத்தாலியின் வத்திகன் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி. - படம்: அமெரிக்க ஊடகம்

ரோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியும் அமெரிக்க சந்திப்பில் காரசார விவாதத்தில் ஈடுபட்டது பலரும் அறிந்ததே.

அந்தச் சந்திப்புக்குப் பின் இருவரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்தபோது வத்திகனின் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

சந்திப்புக்குப் பின் பேசிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின் உண்மையிலேயே உக்ரேனில் அமைதி எற்படுவதை விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் தாங்கள் இருவரும் நிபந்தனையற்ற சண்டைநிறுத்தம் குறித்துப் பேசியதாக ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

பின்னர் ரோம் நகரை விட்டுச் சென்ற அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபருக்கு எதிரான தனது புதிய அணுகுமுறை பற்றிக் கோடி காட்டினார்.

“குடிமக்கள் வாழும் பகுதி, நகரங்கள் போன்றவற்றில் கடந்த சில நாள்களாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தவேண்டிய காரணம் எதுவும் இல்லை,” என்று தமது ட்ருத் சோஷியல் சமூக தளத்தில் அதிபர் டிரம்ப் பதிவு செய்தார்.

“இந்தப் போரை நிறுத்த அவர் விரும்பாமல் எனக்கு சும்மா போக்குக் காட்டி வருகிறாரோ என்று எண்ண வைக்கிறது. இதற்கு ரஷ்யா மீது வங்கி தொடர்பான அல்லது மற்ற தடைகள் விதிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்க வைக்கிறது. பலர் உயிர் இழக்கின்றனர்,” என்று கூறினார்.

இந்தப் போர் போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் இறுதிச் சடங்கை மேலும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் ரஷ்யப் படைகள் தனது கர்ஸ்க் பகுதியை உக்ரேனியப் படைகளிடமிருந்து மீட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்