கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதற்கான நிர்வாக உத்தரவில் அவர் வியாழக்கிழமை (ஜூலை 31) கையெழுத்திட்டார்.
இந்த வரி விதிகம் கடந்த மாதம் அறிவித்த 25 விழுக்காட்டு வரியைக் காட்டிலும் குறைவு.
ஜூலையில் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்புகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்புக்கு வரவிருந்த நிலையில் மலேசியாவுக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது.
அதற்கு, டிரம்ப்பிற்கு ஆறுதல் அளிக்கும் செயல்களை மலேசியா செய்தது. குறிப்பாக, நவீன பகுதி மின்கடத்தி நுண்சில்லுகள் மலேசியா வழியாகக் கடத்தப்படுவதை திரு அன்வார் நிர்வாகம் முறியடித்து வருகிறது. அத்துடன், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான சண்டையை நிறுத்த சமாதான முயற்சிகளை மலேசியா மேற்கொண்டது.
வியட்னாம், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் போன்ற இதர தென்கிழக்காசிய நாடுகளுக்கு இணையாக, 20 விழுக்காட்டுக்கும் குறைவான வரிவிதிப்பை மலேசியா விரும்பியது. அது தொடர்பாக திரு டிரம்ப்பிடம் தாம் தொலைபேசி வழி உரையாடியதாகவும் நல்ல செய்தி விரைவில் வரும் என்றும் திரு அன்வார் கூறியிருந்தார்.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதற்காக, தொலைபேசி உரையாடலின்போது தம்மிடம் திரு டிரம்ப் நன்றி தெரிவித்ததாகவும் திரு அன்வார் தெரிவித்திருந்தார்.
அவ்விருவரும் வியாழக்கிழமை (ஜூலை 31) காலை தொலைபேசியில் உரையாடியதாக மலேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரிவிதிப்பு, பொருளியல் நிலவரத்திற்கு ஏற்க விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க மத்திய வங்கி இவ்வாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துக் கணித்துள்ளது. நிச்சயமற்ற போக்கு நீடிக்கும் வேளையில், இதற்கு முன்னர் முன்னுரைத்து இருந்த 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை என்னும் வளர்ச்சி விகிதத்தை 4 விழுக்காடு முதல் 4.8 விழுக்காடு வரை என்று மத்திய வங்கி குறைத்துள்ளது.

