அமெரிக்க ஆயுதப் படையின் தலைமைத்துவத்தை மாற்றி அமைக்கும் டிரம்ப்

2 mins read
6db3bc1d-15dc-45bf-8278-cf38c34e92bf
ஓய்வுப்பெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் டேன் கேனை அமெரிக்காவின் அடுத்த ஆயுதப் படைத் தலைவராக முன்மொழிய இருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க ஆயுதப் படையின் தலைமைத்துவத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாற்றி அமைக்கிறார்.

பிப்ரவரி 21ல் ஆயுதப் படைத் தலைவராக இருந்த விமானப் படை ஜெனரல் சி.கியூ. பிரௌனைப் பதவி நீக்கம் செய்தார்.

மேலும் ஐந்து அட்மிரல்களையும் ஜெனரல்களையும் அவர் பதவி நீக்கம் செய்தார்.

ஓய்வுப்பெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் டேன் கேனை அடுத்த ஆயுதப் படைத் தலைவராக முன்மொழிய இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓய்வுப்பெற்ற அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தி ஆயுதப் படையில் தலைவராக நியமிப்பது அமெரிக்காவில் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை.

ஓய்வுப்பெறுவதற்கு முன்பு லெஃப்டினெண்ட் ஜெனரல் கேன், அமெரிக்க மத்திய உளவுத்துறையின் ராணுவ விவகார இணை இயக்குநராகப் பதவி வகித்தார்.

அவர் எஃப்16 போர் விமானத்தைச் செலுத்து விமானியாக இருந்தவர்.

“லெஃப்டினெண்ட் ஜெனரல் கேன் உண்மையான வீரர்,” என்று அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

ஜெனரல் பிரௌன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அதிபர் டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை.

அமெரிக்காவுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய ஜெனரல் பிரௌனுக்கு அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கக் கடற்படையின் தலைவரையும் அதிபர் டிரம்ப் மாற்ற இருக்கிறார்.

தற்போது அட்மிரல் லீசா ஃபிரான்சேட்டி அப்பதவியை வகிக்கிறார்.

ஆயுதப் படையின் தலைமைத்துவத்தை மாற்ற அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராணுவ விவகாரங்களை அதிபர் டிரம்ப் அரசியலாக்குகிறார் என அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

அதிபர் டிரம்ப்பின் இச்செயல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் ஆயுதப் படையினருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று மசெசூசட்ஸ் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதியான சேத் மோல்டன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்