ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வைத்த பரிந்துரையை நிராகரித்தார் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வைத்த பரிந்துரையை நிராகரித்தார் டிரம்ப்

படம்: ஏஎஃப்பி

27 Sep 2026 - 11:26 am

2 mins read

வா‌ஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் மத்திய கிழக்கில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஈரான் முன்வைத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்திருக்கிறார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் அதன் பரிந்துரையை முன்வைத்தது. கத்தார் சமரசப்பேச்சாளர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு ஈரானின் பரிந்துரை அனுப்பப்பட்டது. உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஏழு நாள்களுக்குள் வட்டார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தான் முன்வைத்த ஒப்பந்தம் உதவும் என்று ஈரான் கூறியிருந்தது.

ஆனால் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் அவர்கள் முன்வைத்த பரிந்துரையை நிராகரிக்கிறேன்,” என்றார்.

“அவர்கள் கடுமையாகத் தோல்வியடைந்து வருவதால் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள விரும்புகிறார்கள்,” என்று திரு டிரம்ப் கூறினார்.

“நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறோம். அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அது நல்லதுதான்; எனக்கும் ஒப்பந்தங்கள் செய்வது பிடிக்கும். ஆனால் அவர்கள் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குப் பணம் வரவில்லை; ஹோர்முஸ் நீரிணை மூலமே அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது,” என்று அவர் சொன்னார்.

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரான் விதித்துள்ள முற்றுகையை விலக்க அதற்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் அமெரிக்கா அதன் மீது பொருளியல் தடையை விதித்துள்ளது. இது நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

முன்னதாக, சமரசப்பேச்சாளர்கள் மூலம் ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானிய அதிகாரிகள் சவூதி அரேபியாவுடனும் பேச்சு நடத்தினர்.

முன்னதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் நீரிணையை மீண்டும் திறக்கவும் வட்டாரச் சண்டையை நிறுத்தவும் ஏழு நாள் காலக்கெடுவைத் தொடங்க உதவும் என்றார்.

அமெரிக்கா ஒப்புக்கொண்டால், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் பரந்த அளவிலான பேச்சைத் தொடங்கலாம் என்று அவர் கூறினார்.

ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், தமது நாட்டின் அணுசக்தித் திட்டம் பற்றியும் மற்ற விவகாரங்கள் குறித்தும் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறினார். ஆனால் மிரட்டலையோ வற்புறுத்தலையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர். சிபிஎஸ் தொலைக்காட்சியின் ‘ஃபேஸ் தி நேஷன்’ நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் திரு பெசெஷ்கியான் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

“ஈரான் போரை விரும்பவில்லை. ஆனால் நெருக்குதல், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்