வாஷிங்டன்: பல வியப்பூட்டும் செயல்களுக்குச் சொந்தக்காரரான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தற்போது மேலும் ஒரு வியப்பைத் தந்துள்ளார்.
வெள்ளை மாளிகை படிக்கட்டு அருகே இருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தமது படத்தை வைத்துள்ளார் திரு டிரம்ப்.
கொலைமுயற்சியில் இருந்து தாம் தப்பியபோது எடுக்கப்பட்ட படத்தை ஓவியமாக வரையச் சொல்லி அதனை அந்த இடத்தில் அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தொங்கவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கிருந்த திரு ஒபாமாவின் படம், 200 ஆண்டு வரலாற்றுச் சிறப்பைத் தாங்கி நிற்கும் வெள்ளை மாளிகையின் பிரம்மாண்ட நுழைவாயிலுக்கு எதிர்த்திசைச் சுவரில் மாட்டப்பட்டு உள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபரான 78 வயது திரு டிரம்ப் செய்தது வழக்கத்தில் இல்லாதது என்று கூறப்படுகிறது.
பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகைச் சுவரில் படங்களைத் தொங்கவிடுவது நடப்பில் இல்லாத ஒன்று என்றும் அவை குறிப்பிடுகின்றன.
‘வெள்ளை மாளிகையில் புதிய கலைப்படைப்புகள்’ என்ற தலைப்பிட்டு ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள காணொளியில் திரு டிரம்ப் புதிதாக மாட்டியுள்ள படத்தைக் காணமுடிந்தது.