வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம், சிகாகோ நகரில் குடிநுழைவுச் சோதனைகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
அதுகுறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக டாம் ஹோமன், வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்திடம் தெரிவித்தார். திரு ஹோமன், எல்லை தொடர்பிலான விவகாரங்களில் திரு டிரம்ப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்.
“புதிய அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை,” என்றார் அமெரிக்க குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவின் முன்னாள் இடைக்கால இயக்குநர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள திரு ஹோமன்.
“இந்தத் தகவல் கசிவை நாங்கள் ஆராய்கிறோம். அதன் தொடர்பில் முடிவெடுப்போம்,” என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அமெரிக்க குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
திரு டிரம்ப், திங்கட்கிழமை (ஜனவரி 20) அதிபராகப் பொறுப்பேற்பார். அதனைத் தொடர்ந்து அவரின் அரசாங்கம் பல்வேறு நகரங்களில் சோதனைகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. சிகாகோ நகரில்தான் முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நம்பப்படுகிறது.
நியூயார்க், மயாமி நகரங்களிலும் சோதனை நடத்தப்படும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தெரிவித்தது. அதே நாளில் வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிகாகோ நகரில் சோதனைகளை நடத்துவர் என்று செய்தி வெளியிட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது சட்டவிரோதமாகக் குடியேறிய பலரைத் திருப்பியனுப்பப்போவதாக திரு டிரம்ப் தமது தேர்தல் பிராசாரத்தின்போது உறுதியளித்திருந்தார்.