பிட்ஸ்பர்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தம் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டப் பகுதிக்கு திரு டோனல்ட் டிரம்ப் மீண்டும் செல்லவிருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதியன்று பட்லர் நகரில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது திரு டிரம்ப்பை நோக்கி தாக்குதல்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த அந்தப் பிரசாரக் கூட்டத்தில் நடந்த தாக்குதலில் திரு டிரம்ப் காயமுற்றார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரான திரு டிரம்ப், சனிக்கிழமையன்று (அக்டோபர் 5) மீண்டும் பட்லர் நகருக்குப் போகத் திட்டமிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபருமான திரு டிரம்ப், துணை அதிபர் பதவிக்கு அவருடன் போட்டியிடும் ஜே. டி. வான்ஸ் இருவரும் பட்லர் நகருக்குச் செல்வர்.
ஜூலை மாதம் நடந்த தாக்குதலில் காயமுற்றோர், தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாகப் பணியில் இறங்கியோர், தொழில்நுட்பப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க் ஆகியோரும் திரு டிரம்ப், திரு வான்சுடன் பட்லருக்குச் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட இருவர் காயமுற்றனர்.
சம்பவ இடத்துக்கு மீண்டும் போகத் தாம் எண்ணம் கொண்டுள்ளதாக திரு டிரம்ப் பலமுறை கூறியிருக்கிறார்.